“ஜனநாயகத்தை
நிலைநாட்டுவதாகக் கூறி
பிற நாடுகளின் மீது
ஆக்கிரமிப்பு போரை திணிக்கும்
அமெரிக்காவின் அடாவடித்தனம்
ஈராக், ஆப்கன் போர்களில் இருந்து
தொடங்கியதல்ல.
இந்த வேலையை
19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே
தொடங்கி விட்டது
அமெரிக்கா”.
கியூபாவை இணைத்துக் கொள்ள 19-ம் நூற்றாண்டில் இருந்தே அமெரிக்கா பல வேலைகளைச் செய்து வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலேபோய் 1848-மல் ஸ்பெயினிடம் இருந்து கியூபாவை விலைக்கு வாங்க முயற்சித்தது அமெரிக்கா. ஆனால் ஸ்பெயின் அதற்கு மறுத்துவிட்டது.
பின்னர் கியூபாவில் விடுதலைக் குரல்கள் கேட்கத் தொடங்கியவுடனே, ஸ்பெயினை விரட்டி விட்டு கியூபாவில் பொம்மை ஆட்சியை நிறுவும் நோக்கத்தோடு அதன் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கத் தொடங்கியது அமெரிக்கா.
இந்தப் பின்னணியில் 1898 பிப்ரவரி 15-ம் தேதி, அமெரிக்கப் போர்க் கப்பல் ஒன்று கியூபத் துறைமுகத்தில் மர்மமான முறையில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது; இதில் 226 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இதைச் செய்தது ஸ்பெயின்தான் எனச் சாதித்தது அமெரிக்கா. உடனடியாக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதாகக் கூறி கியூபாவுக்குள் நுழைந்தன, அமெரிக்கப் படைகள். விளைவு கியூப மண்ணில் அமெரிக்க-ஸ்பானியப் போர்.
போரில் தோற்றுப்போன ஸ்பெயின் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியேறியது. (கப்பலை வெடிவைத்து தகர்த்தது அமெரிக்காதான் என்பது பின்னர் அம்பலமானது). இதைத் தொடர்ந்து 1902 மே 20-ல் கியூபாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
ஆனால் கியூப மக்கள் மே 20-ம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடுவதில்லை. கியூபாவில் முதன் முதலில் விடுதலைப் பிரகடனம் செய்யப்பட்ட அக்டோபர் 10-ம் தேதியையும்; அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த பாடிஸ்டா அரசை ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது விடுதலைப் படையும் தூக்கியெறிந்த (1959-ம் ஆண்டு) ஜனவரி 1-ம் தேதியையும்தான் சுதந்திர நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்த பின்னர் கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட பொய்ப் பிரச்சாரங்கள், போர் அச்சுறுத்தல்கள், பொருளாதார முற்றுகை, ஊடுருவல், கொலை முயற்சி, கொள்ளை நோய்களைப் பரப்பியது என சதி வேலைகள் எண்ணிலடங்கா. இதற்குக் காரணம் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக