சனி, 1 ஜனவரி, 2011

பங்குச்சந்தை விளையாட்டில் பாம்புகளும், ஏணிகளும்! (1)

ங்குச்சந்தைகளில், பங்குகளின் விலை அதலபாதாளத்தை நோக்கி சரிவதைத் தடுத்து நிறுத்த வர்த்தகத்தை நிறுத்தி வைப்பது தற்போது வாடிக்கையாகி விட்டது. இதை சர்கியூட் பிரேக்கர் என்று அழைக்கிறார்கள். அதாவது பங்குகளின் விலை தாறுமாறாக சரியும்போதோ, உயரும்போதோ, உயர்வும், தாழ்வும் ஒரு வரம்பெல்லையைத் தாண்டும்போது கணினி முறைகள் செயல்பட்டு பங்குப் பரிவர்த்தனைகளை நிறுத்திவிடும். அதன் பிறகு எந்தப் பங்குகளும் கைமாறாது.

பங்குச்சந்தை வரலாற்றில் இத்தகைய ஒரு நிகழ்வு இரண்டாவது முறையாக அரங்கேறிய நாள், மே 22, 2006. உடனடியாக எழும் கேள்வி அப்படி என்ன பொருளாதாரத்தில் அன்றைக்கு மாற்றம் ஏற்பட்டு விட்டது? என்பதுதான். ஏனெனில் பங்குச் சந்தை குறியீட்டெண்களில் காணப்படும் ஏற்ற இறக்கம் பொருளாதார நிலையின் பொதுப்போக்கை வெளிப்படுத்தும் (Barometer of Economy) என்பது அரிச்சுவடி.

ஆனால், 2006 மே மாதத்தில் (அந்த ஆண்டில் மே 22-ம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 1100 புள்ளிகள் சரிந்தது. இந்த சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாக பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது) பங்குச்சந்தை சரிவு நிகழ்ந்தபோது, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருந்தது. எனவே நியாயமாக அந்த காலகட்டத்தில் பங்குச்சந்தை குறியீட்டெண்கள் உயர்ந்திருக்க வேண்டும். வளர்ச்சிப் பாதையில் உள்ள பொருளாதார நிலையைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கத்தோடு மேலும் முதலீட்டை அதிகப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. முதலீடுகள் விலக்கப்பட்டன. தொடர்ந்து 7 வர்த்தக நாள்களில் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு 6 லட்சம் கோடி ரூபாய் (US$131 billion). (முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டார்கள், முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதல்ல விசயம்; விலக்கிக் கொண்ட முதலீட்டாளர்கள் வேறு, இழப்பைச் சந்தித்த முதலீட்டாளர்கள் வேறு). இதற்குக் காரணம் என்ன?

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), வரி விதிக்கும் அலுவலர்களுக்கு அறிவுரைகள்/நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை முன்வரைவு ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டது. இதன் மீது கருத்து தெரிவித்த வல்லுநர்கள், முன்வரைவு நிலையில் உள்ள இந்த சுற்றறிக்கை அமலுக்கு வந்தால், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors – FII), நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு (Long Term Capital Gain) வரி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டனர். உடனே அன்னிய முதலீட்டாளர்கள் செயலில் இறங்கினர். 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை விற்றுத் தள்ளினர். பங்குச்சந்தை நெருக்கடியில் சிக்கியது.

"அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், முதலீட்டாளர்களாகவே கருதப்படுவார்கள்; வர்த்தகர்களாகக் கருதி மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது"
என 'ஆம் ஆத்மி' (தமிழில் ஏழைப் பங்காளன்) கட்சியைச் சேர்ந்தவரும், அப்போதைய நிதியமைச்சருமான திருவாளர் சிதம்பரம் அறிவித்தார். இத்தனைக்கும் தன்னிடம் எந்த அன்னிய நிறுவன முதலீட்டாளரும் புகார் தெரிவிக்கவில்லை என்றார். புகார் தெரிவிக்காமலே நடவடிக்கை எடுக்கிறார் என்றால், அவர்களின் உள்ளக் கிடக்கையை அறியாதவரா என்ன?

மே மாதத்தில் (2006) ஏற்பட்ட சரிவினால் உருவான அச்ச நிலை பங்குச்சந்தையில் தொடர்ந்து நீடித்தது. ஏற்றமும், இறக்கமுமாக மாறி மாறித் தொடர்ந்தன. இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை விற்று முதலீட்டை விலக்கிக் கொள்ளும் முடிவை நடுவண் அரசு நிறுத்தி வைத்தது. (ஜுலை 6) உடனடியாக பங்குச்சந்தை வர்த்தகம் சுணக்கம் அடைந்தது. மறுநாளும் அரசின் முடிவுக்கு எதிராகவே இருந்தது சந்தை நிலவரம். பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசு சுணக்கம் காட்டுவதால், பங்குகளை விற்கும் போக்கு அதிகரிக்கிறது. புதிய முதலீடுகள் (பங்குகளை வாங்குவது) நிறுத்தப்பட்டதுடன், ஏற்கெனவே உள்ள முதலீடுகளை (பங்குகளை விற்று) திரும்பப் பெறும் வேலையும் நடக்கிறது. பங்குகளை வாங்குவதற்கு ஆளில்லாமல் போகவே, விலை சரிந்து நெருக்கடி ஏற்படுகிறது.

பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவுக்காக, 'வருத்தப்பட்டு பாரம் சுமந்தவர்கள்' அதாவது பங்குகளை விற்றுத் தள்ளியவர்கள் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்தான். ஒரு வகையில் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்-நடவடிக்கை இது. இவர்களது உள்நோக்கம் என்ன?