செவ்வாய், 28 டிசம்பர், 2010

பேரரசின் ஆசை ஈடேறுமா? (2)

கியூபாவின் நவீன வரலாறு என்பது 'இந்தியாவில்' இருந்துதான் தொடங்குகிறது. தங்கம் குவிக்கும் ஆசையால் உந்தப்பட்டு, இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்ட ஸ்பெயின் நாட்டுக் கடலோடி கொலம்பஸ், அக்டோபர் 28, 1492-ம் ஆண்டு கரையிறங்கிய இடம் கியூபா - அதாவது கரீபியன் தீவுகள்.

டினோசார் எலும்புக்கூடு போல ஒரு பெரிய தீவையும், சுற்றிலும் மீனுக்குப் போடப்பட்ட பொரி போல மிதக்கும் சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய கியூபாவில் வாழ்ந்து வந்த சிவப்பிந்திய பூர்வகுடிகள் கொலம்பஸ் மற்றும் தொடர்ந்து வந்த ஸ்பானியர்களால் நரவேட்டையாடப்பட்டு பூண்டோடு ஒழிக்கப்பட்டனர்.

இன்று அங்கு வாழ்வது ஸ்பானியர்கள் (65 விழுக்காடு); ஸ்பானிய-பூர்வகுடி-கறுப்பின கலப்பினத்தவர் (25 விழுக்காடு); மற்றும் மனித வளம் அருகிப் போனதால், உழைப்புக்காக அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கர்கள் (10 விழுக்காடு). இவர்கள் அனைவரும் இணைந்து உருவான தேசம்தான் இன்றைய கியூபா.

38 ஆண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது கியூபா. 1820களில் லத்தீன் (தென்) அமெரிக்க நாடுகள் ஸ்பெயினுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து சுதந்திர நாடுகளாக உருவானபோது கூட, கியூபா ஸ்பெயின் நாட்டுக்கு விசுவாசமாகத்தான் இருந்தது. அப்போது மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வந்த வடஅமெரிக்காவிடம் (இன்றைய யு.எஸ்) அடிமைப்பட நேரும் என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணம். அதாவது கியூபாவை பத்தோடு பதினொன்றாக, மற்றொரு மாநிலமாக இணைத்துக் கொள்வது அமெரிக்காவின் இரு நூற்றாண்டுக் கனவு; இன்று வரை நிறைவேறாத ஆசை. இதற்காக அமெரிக்கா செய்த அருவருப்பான தந்திரங்கள் ஒன்றா? இரண்டா?

பேரரசின் ஆசை ஈடேறுமா? (1)

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ், உலகப் பணக்காரர்களின் பட்டியலையும், அவர்களின் சொத்து மதிப்பையும் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதில் தவறாமல் இடம்பெறும் பெயர் ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro).

1960களின் தொடக்கத்தில் கூலிப்படை அமர்த்தி காஸ்ட்ரோவைக் கொல்ல சிஐஏ முயன்றதை, 2007-ம் ஆண்டின் முற்பாதியில் வெளியான ரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள காஸ்ட்ரோவின் உடல்நலம் தேறிவருவதைப் பற்றி புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:"கடவுள் ஒரு நாள் காஸ்ட்ரோவை இந்த உலகில் இருந்து அகற்றுவார்". (புஷ் மட்டுமல்ல எந்த அமெரிக்க அதிபரைக் கேட்டாலும் இதே பதில்தான் வரும்!)

மாபெரும் மேல்நிலை வல்லரசு என்று சொல்லப்படும் அமெரிக்கா, கியயூப அதிபர் காஸ்ட்ரோவுக்கு எதிராக ஏன் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது? இதற்கான விடையையும், மேற்குறிப்பிட்ட செய்திகளில் அடங்கியுள்ள அவதூறையும், அத்துமீறலையும் புரிந்து கொள்ள கியூபாவின் வரலாற்றை ஒரு "பருந்துப் பார்வையில்" பார்த்து விடுவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

தூரிகை

மனதின் சுழிப்பு
சட்டககமிடப்படாத கித்தான்கள்
தூரிகையின் சுழற்சி
சகல பாவனைகளிலும்
நிறைவேறாத மன ஓவியம்
இயங்கிக் கொண்டே இருக்கிறது
பூர்ண இச்சையால்
புறவண்ணங்கள் குலைக்கப்பட்டு
இழுதி தோய்த்து பூசி மெழுகி
உள்ளொளியின் செம்மை
வெண்மை
பிடிபடுவதில்லை எந்த சித்திரத்திலும்
வண்ணங்களெல்லாம்
சுயமழிந்த பின்பும் சாத்தியப்படுவதில்லை
விசித்திரத்தின் வரைவு
விசனமின்றி
வரையாத சித்திரமின்றி
இருந்து கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை
வண்ணங்களுக்கு பழிப்பு காட்டியபடியே
தூரிகையின் கர்வத்தை
பொடிபடுத்தி குழைத்து
பூசிக்கொண்டபடியே
உருவாகி-அழிகிறது
உருவாகிறது
பேரண்ட ஓவியம்.

(நம்பர் 1 நாவல் இதழில் வெளியானது)

கல்(கு)வாரி

காய்த்துப் போயின கைகள்
கருங்கல் மலை தகர்க்கையில்
நித்தியச் சிறைகளாய்
ஆன்மாவை உள்வாங்கும் மலை முகடுகள்.

நீளப் பகல்களின் தொலைதல்
சாராய ஆற்றாமையில்
மிச்சமிருக்கும் ஆறுதலையும்
பிடுங்கித் தின்னும்.

காயங்களை கிழித்து அம்மணத்திற்கு
ஆடை தைக்கையில்
நிர்வாணப்படும் வாழ்க்கை.

அடுப்புகளும்
சிதைகளாகிப் போகும்
எருவட்டி தட்டி எரிக்கையில்.

முள்முடி சூட்டும்
கந்துக்காரனின் இலக்கணம் மீறிய வசவுகள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும்
உயிர்த்தெழும் ஆவி
சிலுவையில் அறையப்படும்
விடியலில்!

(வண்ணக்கதிர் இதழில் வெளியானது)