செவ்வாய், 25 ஜனவரி, 2011

அந்தரத்தில் தொடுப்பின்றி சுழல்கிறது மின்விசிறியின் நிழல்

யாமக் கோடாரியில்
வெட்டுண்ட சிறகுகள்.

விண்மினிப் பூச்சிகளைப் பரிகசிக்கும்
காற்றாடும் மண்மீன்கள்.

இருளின் வயலில் இருந்து வழியும்
இரவின் துன்பியல்.

உப்பரிகையில் அழுதுகொண்டு
உலாவும் நிலவு.

சாளரத்திற்குள் நுழைய முடியாது
அகன்று கிடக்கும் வானம்.

தூக்கத்தைப் பறித்துக் கொண்டு
விட்டத்திலிருந்து பல்லிளிக்கும்
தனிமைக் குரங்கு.

கருவுண்ட மௌனங்களிலிருந்து
வெளிப்போந்த புனைவு.

கொட்டானில் கட்டுறுத்தி
காலவிருட்சத்தில் கட்டிவிட்டால்...
வீச்சமெடுக்கிறது.

சீழ்க்கை ஒலி கெலிக்கும்
சுவர்க் கோழிகளின் குற்றவேல்.

எப்படியாயினும் களவாடப்படுகிறது இரவு
நாட்களின் தொடக்கத்தில்.

                 (ராப்போது)

சமர்

அணைத்துக் கொள்ளலாம்தான்
ஆனால் உன்னிடம் இருப்பது
கால்கள் மட்டும்தானே.