வியாழன், 30 டிசம்பர், 2010

டாலர் முதற்றே உலகு? (2)

"டாலரின் மதிப்பு
வீழ்ச்சியடைந்து விட்டதாலும்,
இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு
ஏற்பட்ட இழப்பையும் வைத்துப் பார்க்கும்போது,
அமெரிக்க டாலர் என்பது
நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
எனவே, கச்சா எண்ணெய் ஆனது
டாலருக்கு பதிலாக யூரோ போன்ற
பல்வேறுபட்ட நாணய மதிப்பில்,
அவற்றுக்கு மாற்றீடாகத்தான்
விற்கப்பட வேண்டும்".

- குலாம்ஹுசைன் நொசாரி,
ஈரான் எண்ணெய்த்துறை அமைச்சர்
(2007, நவம்பரில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் ஆற்றிய உரை)


ந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் டாலரிவல்தான் வருவாய் ஈட்டுகின்றன. உலகின் மிகப்பெரிய அன்னியச் செலாவணிக் கையிருப்பை வைத்திருக்கும் இந்த நாடுகள், டாலரின் மதிப்பு வீழ்ந்தபோது அன்னியச் செலாவணியில் கணிசமான அளவை இழந்துவிட்டன. இதற்கு இன்னொரு முகமும் உண்டு.

உலகத்திற்கு அமெரிக்கா தர வேண்டிய கடன் தொகை பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. அமெரிக்கா எப்போதுமே திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு அது வளர்ந்து விட்டது; மேலும் வளர்ந்து வருகிறது. அமெரிக்காவின் தேசியக் கடன் 14 டிரில்லியன் டாலர்கள் ($13,879,785,000,000. அதாவது 14 லட்சம் கோடி டாலர்கள்- நவம்பர் 30, 2010 கணக்குப்படி. இது பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்குங்கள்). ஆண்டு வட்டி மட்டும் 40 ஆயிரம் கோடி டாலர்களுக்கு மேல்.

அமெரிக்காவின் 'தேசியக் கடன்களில்' பாதி வெளி நாட்டவர்களிடம் பட்டுள்ள கடன்கள். (அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் என்பது தனி. அது 30, ஜூன் 2008 கணக்குப்படி 13.77 டிரில்லியன் டாலர்கள்). ஆனால், உலகிலேயே மிகுந்த பேறு பெற்ற நாடு அமெரிக்கா. எப்படி என்கிறீர்களா?

டாலர் முதற்றே உலகு? (1)


"ஈரானின்
அணுசக்தித் திட்டங்களை
எதிர்க்கிறது அமெரிக்கா.
எண்ணெய் வளம் மிக்க பகுதியில்
தனது மேலாதிக்க நலன்களுக்கு
இடையூறாகவும்,
இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு
நச்சரிப்பாகவும்
ஈரான் இருக்கிறது என்பதால்தான்.
அதுமட்டுமல்ல,
அமெரிக்காவின்
நேரடியான பொருளாதார நலன்களுடனும்
முரண்படுகிறது, ஈரான்".


ரான் அணுகுணுடு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டுக்கு எதிராக இயன்ற வகையில் எல்லாம் நெருக்கடி கொடுத்து வருகிறது அமெரிக்கா (யு.எஸ்). ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் பல கட்டமாகத் தடைகளை விதித்துள்ளது. அத்துடன் அரசியல், பொருளாதாரம், ராணுவத்துறைகளில் அந்நாட்டை தனிமைப்படுத்துவதன் மூலம், கையை முறுக்கி காரியம் சாதித்துக் கொள்ள நினைக்கிறது. உண்மையிலேயே ஈரானின் அணுசக்தித் திட்டங்கள்தான் அமெரிக்காவுக்குப் பிரச்சினையா? இதற்கான விடை ஈரானின் எதிர்வினையில்தான் மறைந்திருக்கிறது. அந்த எதிர்வினை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளில் ஓரம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அமெரிக்கா ஏவும் அத்தனை அம்புகளுக்கும் பதிலடியாக, ஈரான் ஒரு வேலையை முனைப்பாகச் செய்கிறது. எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்க டாலருக்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவில் மேற்கொள்வது; டாலரில் உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பை யூரோவுக்கு மாற்றுவதுதான் அது.

சர்வதேச பரிவர்த்தனைகளில் டாலரில் இருந்து யூரோவுக்கு மாறுவது அவ்வளவு வலிமையான ஆயுதமா? என்ற கேள்வி எழலாம். வெளிப்படையாகப் பார்த்தால் தொடர்பில்லாதது போலத் தோன்றும் சில நிகழ்ச்சிப் போக்குகள் இந்த கேள்விக்கு விடை சொல்லக் கூடும்.

உலகச் செலாவணிக் கொள்கையைத் தீர்மானிக்கும் 'தனிக்காட்டு ராஜாவாக' வலம் வந்து கொண்டிருந்த அமெரிக்க டாலருக்கு நேரடிப் போட்டியாக ஜனவரி 1, 1999-ல் முளைத்தது 'யூரோ'. ஒப்பீட்டளவில் புதிய நாணயமான யூரோவுக்கு எதிராக 40 விழுக்காடு (%) வீழ்ச்சியடைந்தது டாலரின் மதிப்பு.
80 சென்ட்டுகளாக (100 காசுகள் சேர்ந்து ஒரு ரூபாய் என்பது போல, 100 சென்ட்டுகள் சேர்ந்து ஒரு டாலர்) இருந்த யூரோவின் மதிப்பு 133 சென்ட்டுகளாக அல்லது 1.33 டாலர்களாக உயர்ந்தது. அதாவது டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. யூரோவுக்கு எதிராக மட்டுமல்லாமல், யென் (ஜப்பானிய நாணயம்), யுவான் (சீன நாணயம்) ஆகியவற்றுக்கு எதிராகவும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. ரூபாய்க்கு எதிராகவும் அதன் மதிப்பு (2007 நடுப்பகுதியில்) வீழ்ந்தபோது நமது கவனத்துக்கும் வந்தது.

(யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் இன்றைய நிலவரம் அறிய இங்கே சொடுக்குங்கள்)

பேரரசின் ஆசை ஈடேறுமா? (5)

“அமெரிக்காவை
இரண்டு கால் மிருகத்துக்கு
ஒப்பிடுவதாக இருந்தால்,
டாலரும் பென்டகனும்தான்
அதன் இரண்டு கால்கள்.
அமெரிக்காவின் உயிர்
இந்த கால்களில்தான்
இருக்கிறது”


சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர், சோசலிச முகாமில் இருந்தவை முதற்கொண்டு பல அணி சாரா நாடுகளும் (இந்தியா உட்பட) ஒரு காலை (டாலரை) ஊன்ற இடம் கொடுத்துவிட்டன. அப்படி ஏற்றுக் கொள்ள நினைத்த நாடுகள் அல்லது புலி வாலைப் பிடித்த பின்னர் விட நினைத்த நாடுகள் மற்றொரு காலை ஊன்ற இடம் கொடுத்துவிட்டன. ஆனால் இந்த இரண்டு கால்களையும் ஊன்ற விடாமல் நெருச்சி முள்ளாய் குத்துகிறது கியூபா.

அமெரிக்க சார்பற்ற, ஓரளவுக்கு சுயசார்புள்ள கியூபப் பொருளாதாரரம்; அரசின் மீதும் தலைமை மீதும் கியூப மக்களின் கட்டுக்கோப்பான நிலைகுலையாத நம்பிக்கை ஆகிய 2 காரணங்களால்தான் கியூபா தாக்குப் பிடித்து நிற்கிறது.

அமெரிக்கா மிரள்வதற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை, மேற்குறிப்பிட்ட 2 ஆயுதங்களே போதும் என உலகுக்கு நிரூபித்த நாடு கியூபா. அதன் தனிச்சிறப்பு இதுதான்.

சி.ஐ.ஏ. (அமெரிக்க உளவுத்துறை) மேற்குப் பிரிவின் தலைவர் ஜே.சி.கிங், சிஐஏ இயக்குநர் ஆலன் டல்லஸீக்கு 1959 டிசம்பர் 11 அன்று எழுதிய ரகசிய குறிப்பு அறிக்கை பின்வருமாறு பரிந்துரை செய்கிறது. “ஃபிடல் காஸ்ட்ரோவை ஒழித்துக் கட்டுவதில் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும். மக்கள் திரளிடையே ஃபிடலுக்கு உள்ளதைப் போன்ற மயக்கும் ஆளுமை அவரது தம்பி ரவூலுக்கோ, நெருங்கிய தோழன் சே குவேரா போன்றவர்களுக்கோ கூட கிடையாது. ஃபிடல் இல்லாது போனால் இப்போதைய அரசு வெகு வேகமாகக் கவிழ்ந்து விடும் என்று விசயம் தெரிந்தவர்கள் பலர் நம்புகிறார்கள். அமெரிக்கா இப்பொழுதும் இதைத்தான் நம்புகிறது. புஷ்ஷின் சொற்கள் நமக்கு நிரூபிப்பது இதைத்தான்.

கியூபாவை 53-வது மாநிலமாக இணைத்துக் கொள்ளும் பேரரசின் ஆசை நிறைவேறுமா என்பது கியூபா மற்றும் அந்நாட்டுக்கு பொருளாதார உதவிகளைச் செய்து வரும் வெனிசுலா போன்ற நாடுகளின் எதிர்காலத்தோடும், தவிர்க்க இயலாமல் அமெரிக்காவின் எதிர்காலத்தோடும் பிணைக்கப்பட்டுள்ளது.

(தினமணி அரசியல் அரங்கம் பகுதியில் வெளியான கட்டுரை)

பேரரசின் ஆசை ஈடேறுமா? (4)

கியூபப் புரட்சிக்கு முன்னர் கியூபாவின் விளை நிலங்களில் 75 விழுக்காடும், மொத்த சர்க்கரை உற்பத்தியில் 40 விழுக்காடும், கனிமச் சுரங்கங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசிச் சேவையில் 90 விழுக்காடும், பெட்ரோலிய உற்பத்தியில் 100 விழுக்காடும் அமெரிக்கர்களுக்கே சொந்தம். புரட்சிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. அத்தனையும் நாட்டுடைமையாக்கப்பட்டன.

இதற்கெல்லாம் பதிலடியாக கியூபாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வந்த சர்க்கரை இறக்குமதிக்கு முதலில் தடை விதித்தது அமெரிக்கா. பின்னர் அது கியூபாவுக்கு எதிரான பொருளாதாரப் போராக மாறியது. ஆனால் சோவியத் ஒன்றியம் முழுமையாகக் கைகொடுத்தது.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் கியூபாவின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடியில் தள்ளின. இனி வேறு வழியில்லை, அந்நாடு அமெரிக்காவிடம் சரணாகதி அடைய வேண்டியதுதான் எனப் பலரும் நினைத்த வேளையில், பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு இறையாண்மையுள்ள சுதந்திர நாடாகவே நீடிக்கிறது கியூபா.

அமெரிக்க டாலர் வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் 1993-ல் கியூபா சட்டபூர்வமாக்கியது. 2004 வரை டாலர் முக்கிய செலாவணியாக (கரன்சியாக) பயன்பாட்டில் இருந்தது. கியூபாவில் சுற்றுலாத் தொழில் பெருமளவுக்கு வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏழை-பணக்காரன் என்ற வேறுபாட்டைத் தீர்மானிப்பதே டாலர் என்றாகிப் போனது. உடனடியாக செயலில் இறங்கிய கியூப அரசு, புதிய செலாவணிக் கொள்கை மூலம் புழக்கத்தில் இருந்து டாலரை அகற்றத் திட்டமிட்டது.

டாலர்களை கியூப நாணயமான பெசோவுக்கு மாற்ற வேண்டுமானால் கூடுதலாக 10 சதவீதம் மேல் வரி விதிக்கப்பட்டது. இந்த மேல்வரி யூரோ, கனடா டாலர் போன்ற மற்ற நாணயங்களுக்கு கிடையாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் டாலருக்குப் பதில் மற்ற நாணயங்களைக் கொண்டுவரத் தொடங்கினர். நாட்டுக்குள் டாலர் நுழைவது தன்னியல்பாகவே தடுக்கப்பட்டது. இன்று கியூபாவின் பல சுற்றுலாத் தளங்களில் பரிவர்த்தனைகளில் நேரடியாக யூரோவே வாங்கிக் கொள்ளப்படுகிறது. கியூபா அமெரிக்காவுக்கு அடிபணியாமல் இருப்பதன் சூட்சுமம் இதில்தான் அடங்கியிருக்கிறது.