வியாழன், 30 டிசம்பர், 2010

பேரரசின் ஆசை ஈடேறுமா? (5)

“அமெரிக்காவை
இரண்டு கால் மிருகத்துக்கு
ஒப்பிடுவதாக இருந்தால்,
டாலரும் பென்டகனும்தான்
அதன் இரண்டு கால்கள்.
அமெரிக்காவின் உயிர்
இந்த கால்களில்தான்
இருக்கிறது”


சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர், சோசலிச முகாமில் இருந்தவை முதற்கொண்டு பல அணி சாரா நாடுகளும் (இந்தியா உட்பட) ஒரு காலை (டாலரை) ஊன்ற இடம் கொடுத்துவிட்டன. அப்படி ஏற்றுக் கொள்ள நினைத்த நாடுகள் அல்லது புலி வாலைப் பிடித்த பின்னர் விட நினைத்த நாடுகள் மற்றொரு காலை ஊன்ற இடம் கொடுத்துவிட்டன. ஆனால் இந்த இரண்டு கால்களையும் ஊன்ற விடாமல் நெருச்சி முள்ளாய் குத்துகிறது கியூபா.

அமெரிக்க சார்பற்ற, ஓரளவுக்கு சுயசார்புள்ள கியூபப் பொருளாதாரரம்; அரசின் மீதும் தலைமை மீதும் கியூப மக்களின் கட்டுக்கோப்பான நிலைகுலையாத நம்பிக்கை ஆகிய 2 காரணங்களால்தான் கியூபா தாக்குப் பிடித்து நிற்கிறது.

அமெரிக்கா மிரள்வதற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை, மேற்குறிப்பிட்ட 2 ஆயுதங்களே போதும் என உலகுக்கு நிரூபித்த நாடு கியூபா. அதன் தனிச்சிறப்பு இதுதான்.

சி.ஐ.ஏ. (அமெரிக்க உளவுத்துறை) மேற்குப் பிரிவின் தலைவர் ஜே.சி.கிங், சிஐஏ இயக்குநர் ஆலன் டல்லஸீக்கு 1959 டிசம்பர் 11 அன்று எழுதிய ரகசிய குறிப்பு அறிக்கை பின்வருமாறு பரிந்துரை செய்கிறது. “ஃபிடல் காஸ்ட்ரோவை ஒழித்துக் கட்டுவதில் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும். மக்கள் திரளிடையே ஃபிடலுக்கு உள்ளதைப் போன்ற மயக்கும் ஆளுமை அவரது தம்பி ரவூலுக்கோ, நெருங்கிய தோழன் சே குவேரா போன்றவர்களுக்கோ கூட கிடையாது. ஃபிடல் இல்லாது போனால் இப்போதைய அரசு வெகு வேகமாகக் கவிழ்ந்து விடும் என்று விசயம் தெரிந்தவர்கள் பலர் நம்புகிறார்கள். அமெரிக்கா இப்பொழுதும் இதைத்தான் நம்புகிறது. புஷ்ஷின் சொற்கள் நமக்கு நிரூபிப்பது இதைத்தான்.

கியூபாவை 53-வது மாநிலமாக இணைத்துக் கொள்ளும் பேரரசின் ஆசை நிறைவேறுமா என்பது கியூபா மற்றும் அந்நாட்டுக்கு பொருளாதார உதவிகளைச் செய்து வரும் வெனிசுலா போன்ற நாடுகளின் எதிர்காலத்தோடும், தவிர்க்க இயலாமல் அமெரிக்காவின் எதிர்காலத்தோடும் பிணைக்கப்பட்டுள்ளது.

(தினமணி அரசியல் அரங்கம் பகுதியில் வெளியான கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக