வெள்ளி, 31 டிசம்பர், 2010

தலைப்பு மாறிய புற்கள்

மைதிப் பூங்கா...
அமைதிப் பூங்கா...

ஏன் இந்த ஓலம்?
எதற்கிந்த பிதற்றல்?

நாய்களைத் தின்று
நாய்கள்
வெறி நாய்களாய்
பரிணமித்த தறுவாயில்
வெறி நாய்க் கடியுண்டவன்
தண்ணீரைக் கண்டு அலறுதலாய்

ஏன் இந்த ஓலம்?
செத்துப் போனவைகளுக்கான ஒப்பாரியா?

மானுடக் கிளையில்
மனிதப் பிரேதங்கள்
உள்ளீடற்ற
பிரேத மனிதர்களும்.

ரத்தமும், மதி மொத்தமும்
வெளியே சிதறிச் சிரிக்கும்.

எவனதோ ஆணையில்
உணர்வற்ற வீமசேனர்கள்
இரு கூறாய்க் கிழித்து
மாற்றியெறிந்த
சராசந்தனின்
ரத்தச் சுவட்டில்-
தலைப்பு மாறிய புற்கள்
உலக்கைகளாய் உதித்தெழ
யது குலம் செத்தொழியும்
தாயாதிச் சண்டையில்.

அதுவரை-
கலவரக் காடென்பதே பொருத்தம்.
.

மீண்டும் பனிப் போர் மூளுமா? (2)

"பனிப் போர் (1947-1991) என்பது:
இரண்டாம் உலகப் போருக்குப் பின்,
சோவியத் ஒன்றியத்தின் (USSR)
தலைமையிலான நாடுகளுக்கும்,
அமெரிக்கா (USA) தலைமையிலான
மேற்கு நாடுகளுக்கும்
இடையே நிலவி வந்த
அரசியல் முரண்பாடு,
ராணுவப் பதற்றம்,
பதிலிப் போர்கள் (நேரடியாக மோதாமல்
பிற நாடுகள், குழுக்கள் மூலமாக
போரிடுவது, தாக்குவது),
மற்றும் பொருளாதாரப் போட்டியைக்
குறிக்கும்.
பனிப் போரில் ஈடுபட்டிருந்த
இரு முதன்மையான நாடுகளின்
ராணுவங்கள்
ஒரு போதும்
நேரடியாக மோதிக் கொண்டதில்லை.
ஆனால்,
ராணுவக் கூட்டணி,
செயல் தந்திர அடிப்படையில்
படைகளைக் குவித்தல்,
தங்கள் முகாமில் உள்ள
பலவீனமான நாடுகளுக்கு
நிதியை வாரியிறைத்தல்,
அணு மற்றும் ஆயுதப் போட்டியில் ஈடுபடுதல்
போன்ற செயல்கள் மூலம்
பதற்றத்தை பேணி வந்தன"



டுத்தரத் தொலைவு இலக்குகளைத் தாக்கக் கூடிய ஜுபிடர் ரக ஏவுகணைகளை 1961-ல் துருக்கியில் நிறுவியது அமெரிக்கா. இது தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் என நினைத்த சோவியத் ஒன்றியம் எச்சரிக்கையும் செய்யவில்லை; மாற்றுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவின் மூக்கருகே உள்ள கியூபாவில் அணுகுண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுவத் தொடங்கியது. கிட்டத்தட்ட அணு ஆயுதப் போரின் விளிம்புக்கு உலகைத் தள்ளியது போலத் தோற்றம் காட்டிய இந்த நெருக்கடியில் அமெரிக்கா பின்வாங்க வேண்டியதாயிற்று. ஐ.நா. தலையீட்டைத் தொடர்ந்து இரு நாடுகளும் ஏவுகணைகளை விலக்கிக் கொண்டன.

ஏவுகணைப் பாதுகாப்பு அரண் விசயத்தில் கூட இழுபறிக்குப் பின்னர் இதுதான் நடந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு அரண் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக செப்டம்பர் 2009-ல் ஒபாமா அறிவித்தார்.

அமெரிக்காவும், ரஷ்யாவும் உளவாளிகளைப் பரிமாறிக் கொண்டதுகூட இதற்கு நிகரானதுதான். ஜூன் 27, 2010-ல் அன்னா சாப்மன் உள்ளிட்ட 10 ரஷ்ய உளவாளிகளைக் கைது செய்தது அமெரிக்க புலனாய்வுத் துறை. பின்னர் இவர்களை ரஷ்யாவிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் வசமிருந்த 4 அமெரிக்க உளவாளிகளை மீட்டுக் கொண்டது. இதுபோன்ற சம்பவம் பனிப் போர் காலத்தில் பல முறை நடந்துள்ளது. இந்த ஒற்றுமைதான் பனிப் போர் கால ஃபிளாஷ்பேக்குகளை மீண்டும் நினைவூட்டியது. கூடவே ஏகாதிபத்தியங்கள் அனைத்தும் காகிதப் புலிகளே என்று, பனிப் போர் காலத்தில் சீனக் குடியரசுத் தலைவர் மா-சே-துங் கூறியதும் நினைவு கூரத்தக்கது.

(தினமணி அரசியல் அரங்கம் பகுதியில் வெளியான கட்டுரை. புதிய, கூடுதல் தகவல்களுடன், சுருக்கப்பட்ட வடிவில் இங்கு பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது)

மீண்டும் பனிப் போர் மூளுமா? (1)

ருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே, பனிப்போர் (கெடுபிடிப் போர்) நடைபெற்றது. சோவியத் ஒன்றியத்தின் தகர்வுடன் இந்தப் போர் முடிவுக்கு வந்தது. இந்த பனிப்போர் (cold war) பற்றிய ஆரவாரங்கள், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மைக் காலத்தில் இரு வேறு தருணங்களில் எழுந்தன.

1.மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு அரண் (Missile Defence Shield) அமைக்கும் அமெரிக்காவின் திட்டம்;
2.ரஷ்ய உளவாளிகள் 11 பேர் அமெரிக்காவில் பிடிபட்டு, பின்னர் அவர்களை ரஷ்யா வசம் ஒப்படைத்து, அவர்களிடமிருந்த அமெரிக்க உளவாளிகளை மீட்ட நிகழ்வு;
ஆகிய இரண்டும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.

ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட, 10 ஏவுகணைகளை ரஷ்யாவின் எல்லை நாடான போலந்தில் நிறுத்துவது; முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கூட்டணி நாடான செக் குடியரசில் வலுவான ராடார் கண்காணிப்பு நிலையத்தை நிறுவுவது. இதுதான் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அரண்.

ஈரான் போன்ற "போக்கிரி நாடுகள்" அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க இந்த ஏற்பாடு என்றது அமெரிக்கா.

2007-ல் இத்திட்டம் முன்வைக்கப்பட்ட போது, அப்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின் (இப்போது பிரதமர்) கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இத்திட்டம் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று கூறிய புடின், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது பனிப்போர் நிலைமைகளுக்கு உலகை மீண்டும் இட்டுச் செல்லும் என்றார். அத்தோடு நிற்கவில்லை, ரஷ்யா தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார். அது என்ன பதிலடி என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விட்டது.

போலந்துக்கு பதிலாக தெற்கு ஐரோப்பாவிலோ, துருக்கியிலோ, ஈராக்கிலோ அல்லது கடற்படைத் தளங்களிலோ இந்த ஏவுகணைப் பாதுகாப்பு அரணை அமைக்கலாம்; எதிரி நாட்டின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல்களுக்கு அஜர்பைஜானில் உள்ள தனது ராடார் நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளலாம் என மாற்றுத் திட்டத்தை முன்வைத்தது ரஷ்யா.

அஜர்பைஜானில் 1985 முதல் ராடார் நிலையத்தைப் பராமரித்து வருகிறது, ரஷ்ய ராணுவம். கபலா (qabala station) நிலையம் என்று குறிப்பிடப்படும் இது உலகின் மிகப்பெரிய ராடார் நிலையங்களில் ஒன்று. இந்தியப் பெருங்கடல் பகுதி, மத்தியக் கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை கண்காணிக்கிறது.

இப்பகுதிகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் கபலா ராடார் நிலையத்தின் கழுகுக் கண்களுக்கு தப்பிக்க முடியாது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் இந்த கபலா நிலையத்தை அஜர்பைஜானிடம் இருந்து மொத்த குத்தகை அடிப்படையில் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. புதிதாக ராடார் நிலையத்தை அமைப்பதற்குப் பதில் இந்த கபலா நிலையத்தையே ரஷ்யாவுடன் கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தினார் புதின். இதை கியூபா ஏவுகணை நெருக்கடி (கரீபியன் நெருக்கடி அல்லது அக்டோபர் நெருக்கடி) என்றழைக்கப்படும் பனிப்போர் கால நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

டாலர் முதற்றே உலகு? (4)

லகப் பொருளாதாரத்தின் தீர்மானகரமான சக்தியாகத் திகழும் 'நீர்மத் தங்கம்' - பெட்ரோலியம். இதை உற்பத்தி செய்யும் நாடுகள் தமது சேமிப்பை அமெரிக்காவில்தான் முதலீடு செய்கின்றன.

1973-ல் ஏற்பட்ட டாலர் வீழ்ச்சியைத் தொடர்ந்து, உலகின் முதல் நிலை பெட்ரோலிய ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது அமெரிக்கா. இதன்படி எண்ணெய் விலையைத் தொடர்ந்து டாலரிலேயே தீர்மானிக்க சவூதி ஒப்புக் கொண்டது. பின்னர் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அனைத்திற்கும் இதுவே தலைவிதியானது.

இதிலிருந்து விலக பெட்ரோலிய நாடுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அமெரிக்காவை அச்சுறுத்துகிறது. அப்படித்தான் அமெரிக்காவை அச்சுறுத்தியது ஈராக். முதலில் அமெரிக்காவின் எண்ணெய் நலன்களுக்கு விரோதமாகவும், பின்னர் டாலரில் இருந்து யூரோவுக்கும் மாறிய ஈராக்கின் நிலை எல்லோருக்கும் கண்கூடாகத் தெரிந்ததுதான். இப்போது ஈரான். யூரோ நாணயம் உருவாவதற்கு முன்பே, அது கருத்தளவில் விவாதிக்கப்பட்டு வந்தபோதே அம்முயற்சியை வரவேற்றது ஈரான். அதுவரை கடைக்கண் அளவில் இருந்து வந்த அமெரிக்காவின் "ஜனநாயகப் பார்வை" ஈரான் மீது தீவிரமாகப் படிந்தது அப்போதுதான். இதற்குப் பதிலடியாகத்தான் அகமதிநிஜாத் தலைமையிலான ஈரான், டாலர்களில் இருந்து யூரோவை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.

அமெரிக்காவின் சொற்களில் கூறுவதென்றால், "தீமையின் அச்சு" (Axis of Devil) நாடுகளில் ஒன்று ஈரான். இந்தப் பட்டியலில் உள்ள மேலும் 2 நாடுகள் வடகொரியா மற்றும் வெனிசுலா. இரண்டும் அமெரிக்காவின் டாலருக்கு எதிராக, யூரோவை தூக்கிப் பிடிக்கின்றன. அதிலும் வடகொரியா சர்வதேச பரிவர்த்தனைகள் முழுவதையும் யூரோவில்தான் மேற்கொள்கிறது. இனி டாலருக்கு எதிராக அமைய வேண்டும் புதிய உலகம்.

பின்குறிப்பு: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பின்பாட்டு பாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம்; ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. மேலும், யூரோ நாணயத்தை வலுப்படுத்தும் விசயத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமையோ, வலிமையான சிந்தனையோ இல்லை. எனவே, மேலை நாடுகளின் முகாமுக்குள் ஏற்படும் டாலர்-யூரோ என்ற முரண்பாட்டை வெற்றிகரமாகக் கையாள்வது என்பது ஐயத்திற்கிடமான உத்தியே.

(தினமனணி அரசியல் அரங்கம் பகுதியில் வெளியான கட்டுரை. புதிய, கூடுதல் விவரங்களுடன் திருத்தப்பட்டு இங்கே பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது.)

டாலர் முதற்றே உலகு? (3)

லகின் 'ரிசர்வ் கரன்சியை' பேப்பர் மற்றும் மையைத் தவிர வேறு செலவின்றி விருப்பம்போல் அச்சடித்துக் கொள்ள சிறப்புரிமை பெற்ற நாடு. இப்படி அச்சடிப்பதன் மூலம் பணவீக்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது அமெரிக்கா. அதுமட்டுமல்ல, தனது சொந்த விருப்பத்துக்கு அச்சடித்துக் கொள்ளும் டாலர்களில் வெளிநாட்டுக் கடன் பெற்றுள்ள நாடும் அமெரிக்காதான்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளின் கடன்களும் டாலரிலேயே குறிப்பிடப்படுவதுடன், அவை தமது சொந்த நாணயத்தையும், பொருள்களையும் விற்று இந்த டாலரை வாங்குகின்றன. அதை மீண்டும் அமெரிக்கா வெளியிடும் கருவூலச் சான்றிதழ்களிலேயே (கடன் பத்திரங்களில்) முதலீடு செய்கின்றன.

இந்தக் கடன் பத்திரங்களைப் பொருத்தவரை குறிப்பிட்ட விழுக்காடு (%) வட்டி உண்டு. மற்றபடி முதலுக்கு மோசம்தான். அவர்கள் எந்த நிலையிலும் இந்த காகித சான்றிதழ்களை கொடுத்து மீண்டும் பணமாக்கிக் கொள்ள முடியாது; அதற்கு உலக நாடுகள் முயற்சி செய்தால் அமெரிக்கப் பொருளாதாரம் சீட்டுக் கட்டு மாளிகையைப் போல சரிந்து விடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால் 'டாலரின் ஆதிக்கம்' தொடர வேண்டும்.

அமெரிக்கா வெளிநாடுகளில் செய்துள்ள வருவாய் மீது 9 விழுக்காடு வருவாய் ஈட்டுகிறது. பிற நாடுகள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீட்டின் மீது ஈட்டும் வருவாய் 3 விழுக்காடுதான். உலக நாடுகளுக்கு 3 % கொடுக்கும் அமெரிக்கா, உலக நாடுகளிடமிருந்து மும்மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறது. அமெரிக்காவிடம் இருந்து பெற்ற கடனுக்கு உலக நாடுகள் செலுத்தும் வட்டி இதில் சேராது.

இருப்பினும் அமெரிக்காவின் அதீத நுகர்வு காரணமாக, வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறை (2008-ம் கணக்குப்படி) ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி டாலர்களையும் தாண்டி வளர்ந்து கொண்டே செல்கிறது. அதாவது ஏற்றுமதியை விட இறக்குமதி ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி டாலர்கள் அதிகம். இப்படியே வளர்ந்து வளர்ந்து பல லட்சம் கோடி டாலர்கள் கடனாளியாக இருக்கிறது அமெரிக்கா.

உலக நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல்-வாங்கலில் டாலர் பயன்படுகிறது. உலக அன்னியச் செலாவணி சேமிப்பை டாலரில்தான் வைத்திருக்கின்றன. அமெரிக்கா தனக்குத் தேவைப்படும்போதெல்லாம் கருவூலச் சான்றிதழ்களை (கடன் பத்திரங்களை) வெளியிடுகிறது. இவற்றிலும், அமெரிக்க நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளிலும் உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்கின்றன. அதாவது உலகத்தின் சேமிப்பு அமெரிக்காவில் முதலீடுகளாகக் குவிகிறது. ஆனால் அமெரிக்காவின் சராசரி சேமிப்பு விகிதம் 0.2% மட்டுமே. (2007 டிசம்பரில் அமெரிக்கப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கி, டாலரின் மதிப்பு சரிந்த பின்னர், வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 84 ஆயிரம் கோடி டாலர்களில் இருந்து, 2009-ல் 50 ஆயிரம் கோடி டாலர்களாகக் குறைந்தது. 2008-ல் 1 % ஆக இருந்த தனியாள் சேமிப்பு விகிதம் 2009-ன் பிற்பாதியில் 5 விழுக்காடாக உயர்ந்தது).

சேமிப்பு விகிதம் பாதாளத்தில் இருக்கிறது. பூதாகரமான தேசியக் கடன் சுமை. வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டாலர்கள். உள்நாட்டு லாப விகிதம் 1972-ம் ஆண்டின் நிலையில் இருந்து மேம்படவில்லை. நிதி நெருக்கடி, பொருளாதாரச் சரிவினால் அது இன்னும் கீழே போய்விட்டது. இத்தனை தோல்விகளையும் சமாளித்து அமெரிக்கா காலந் தள்ளுவதன் ரகசியம் உலகப் பொருளாதாரத்தில் டாலரின் ஆதிக்கம்தான். ஆனால் அதற்குப் போட்டியாக கிளம்பிவிட்டது நேற்று முளைத்த 'யூரோ'.