வெள்ளி, 31 டிசம்பர், 2010

மீண்டும் பனிப் போர் மூளுமா? (2)

"பனிப் போர் (1947-1991) என்பது:
இரண்டாம் உலகப் போருக்குப் பின்,
சோவியத் ஒன்றியத்தின் (USSR)
தலைமையிலான நாடுகளுக்கும்,
அமெரிக்கா (USA) தலைமையிலான
மேற்கு நாடுகளுக்கும்
இடையே நிலவி வந்த
அரசியல் முரண்பாடு,
ராணுவப் பதற்றம்,
பதிலிப் போர்கள் (நேரடியாக மோதாமல்
பிற நாடுகள், குழுக்கள் மூலமாக
போரிடுவது, தாக்குவது),
மற்றும் பொருளாதாரப் போட்டியைக்
குறிக்கும்.
பனிப் போரில் ஈடுபட்டிருந்த
இரு முதன்மையான நாடுகளின்
ராணுவங்கள்
ஒரு போதும்
நேரடியாக மோதிக் கொண்டதில்லை.
ஆனால்,
ராணுவக் கூட்டணி,
செயல் தந்திர அடிப்படையில்
படைகளைக் குவித்தல்,
தங்கள் முகாமில் உள்ள
பலவீனமான நாடுகளுக்கு
நிதியை வாரியிறைத்தல்,
அணு மற்றும் ஆயுதப் போட்டியில் ஈடுபடுதல்
போன்ற செயல்கள் மூலம்
பதற்றத்தை பேணி வந்தன"



டுத்தரத் தொலைவு இலக்குகளைத் தாக்கக் கூடிய ஜுபிடர் ரக ஏவுகணைகளை 1961-ல் துருக்கியில் நிறுவியது அமெரிக்கா. இது தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் என நினைத்த சோவியத் ஒன்றியம் எச்சரிக்கையும் செய்யவில்லை; மாற்றுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவின் மூக்கருகே உள்ள கியூபாவில் அணுகுண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுவத் தொடங்கியது. கிட்டத்தட்ட அணு ஆயுதப் போரின் விளிம்புக்கு உலகைத் தள்ளியது போலத் தோற்றம் காட்டிய இந்த நெருக்கடியில் அமெரிக்கா பின்வாங்க வேண்டியதாயிற்று. ஐ.நா. தலையீட்டைத் தொடர்ந்து இரு நாடுகளும் ஏவுகணைகளை விலக்கிக் கொண்டன.

ஏவுகணைப் பாதுகாப்பு அரண் விசயத்தில் கூட இழுபறிக்குப் பின்னர் இதுதான் நடந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு அரண் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக செப்டம்பர் 2009-ல் ஒபாமா அறிவித்தார்.

அமெரிக்காவும், ரஷ்யாவும் உளவாளிகளைப் பரிமாறிக் கொண்டதுகூட இதற்கு நிகரானதுதான். ஜூன் 27, 2010-ல் அன்னா சாப்மன் உள்ளிட்ட 10 ரஷ்ய உளவாளிகளைக் கைது செய்தது அமெரிக்க புலனாய்வுத் துறை. பின்னர் இவர்களை ரஷ்யாவிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் வசமிருந்த 4 அமெரிக்க உளவாளிகளை மீட்டுக் கொண்டது. இதுபோன்ற சம்பவம் பனிப் போர் காலத்தில் பல முறை நடந்துள்ளது. இந்த ஒற்றுமைதான் பனிப் போர் கால ஃபிளாஷ்பேக்குகளை மீண்டும் நினைவூட்டியது. கூடவே ஏகாதிபத்தியங்கள் அனைத்தும் காகிதப் புலிகளே என்று, பனிப் போர் காலத்தில் சீனக் குடியரசுத் தலைவர் மா-சே-துங் கூறியதும் நினைவு கூரத்தக்கது.

(தினமணி அரசியல் அரங்கம் பகுதியில் வெளியான கட்டுரை. புதிய, கூடுதல் தகவல்களுடன், சுருக்கப்பட்ட வடிவில் இங்கு பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக