வெள்ளி, 31 டிசம்பர், 2010

மீண்டும் பனிப் போர் மூளுமா? (1)

ருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே, பனிப்போர் (கெடுபிடிப் போர்) நடைபெற்றது. சோவியத் ஒன்றியத்தின் தகர்வுடன் இந்தப் போர் முடிவுக்கு வந்தது. இந்த பனிப்போர் (cold war) பற்றிய ஆரவாரங்கள், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மைக் காலத்தில் இரு வேறு தருணங்களில் எழுந்தன.

1.மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு அரண் (Missile Defence Shield) அமைக்கும் அமெரிக்காவின் திட்டம்;
2.ரஷ்ய உளவாளிகள் 11 பேர் அமெரிக்காவில் பிடிபட்டு, பின்னர் அவர்களை ரஷ்யா வசம் ஒப்படைத்து, அவர்களிடமிருந்த அமெரிக்க உளவாளிகளை மீட்ட நிகழ்வு;
ஆகிய இரண்டும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.

ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட, 10 ஏவுகணைகளை ரஷ்யாவின் எல்லை நாடான போலந்தில் நிறுத்துவது; முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கூட்டணி நாடான செக் குடியரசில் வலுவான ராடார் கண்காணிப்பு நிலையத்தை நிறுவுவது. இதுதான் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அரண்.

ஈரான் போன்ற "போக்கிரி நாடுகள்" அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க இந்த ஏற்பாடு என்றது அமெரிக்கா.

2007-ல் இத்திட்டம் முன்வைக்கப்பட்ட போது, அப்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின் (இப்போது பிரதமர்) கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இத்திட்டம் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று கூறிய புடின், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது பனிப்போர் நிலைமைகளுக்கு உலகை மீண்டும் இட்டுச் செல்லும் என்றார். அத்தோடு நிற்கவில்லை, ரஷ்யா தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார். அது என்ன பதிலடி என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விட்டது.

போலந்துக்கு பதிலாக தெற்கு ஐரோப்பாவிலோ, துருக்கியிலோ, ஈராக்கிலோ அல்லது கடற்படைத் தளங்களிலோ இந்த ஏவுகணைப் பாதுகாப்பு அரணை அமைக்கலாம்; எதிரி நாட்டின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல்களுக்கு அஜர்பைஜானில் உள்ள தனது ராடார் நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளலாம் என மாற்றுத் திட்டத்தை முன்வைத்தது ரஷ்யா.

அஜர்பைஜானில் 1985 முதல் ராடார் நிலையத்தைப் பராமரித்து வருகிறது, ரஷ்ய ராணுவம். கபலா (qabala station) நிலையம் என்று குறிப்பிடப்படும் இது உலகின் மிகப்பெரிய ராடார் நிலையங்களில் ஒன்று. இந்தியப் பெருங்கடல் பகுதி, மத்தியக் கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை கண்காணிக்கிறது.

இப்பகுதிகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் கபலா ராடார் நிலையத்தின் கழுகுக் கண்களுக்கு தப்பிக்க முடியாது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் இந்த கபலா நிலையத்தை அஜர்பைஜானிடம் இருந்து மொத்த குத்தகை அடிப்படையில் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. புதிதாக ராடார் நிலையத்தை அமைப்பதற்குப் பதில் இந்த கபலா நிலையத்தையே ரஷ்யாவுடன் கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தினார் புதின். இதை கியூபா ஏவுகணை நெருக்கடி (கரீபியன் நெருக்கடி அல்லது அக்டோபர் நெருக்கடி) என்றழைக்கப்படும் பனிப்போர் கால நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக