உலகப் பொருளாதாரத்தின் தீர்மானகரமான சக்தியாகத் திகழும் 'நீர்மத் தங்கம்' - பெட்ரோலியம். இதை உற்பத்தி செய்யும் நாடுகள் தமது சேமிப்பை அமெரிக்காவில்தான் முதலீடு செய்கின்றன.
1973-ல் ஏற்பட்ட டாலர் வீழ்ச்சியைத் தொடர்ந்து, உலகின் முதல் நிலை பெட்ரோலிய ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது அமெரிக்கா. இதன்படி எண்ணெய் விலையைத் தொடர்ந்து டாலரிலேயே தீர்மானிக்க சவூதி ஒப்புக் கொண்டது. பின்னர் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அனைத்திற்கும் இதுவே தலைவிதியானது.
இதிலிருந்து விலக பெட்ரோலிய நாடுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அமெரிக்காவை அச்சுறுத்துகிறது. அப்படித்தான் அமெரிக்காவை அச்சுறுத்தியது ஈராக். முதலில் அமெரிக்காவின் எண்ணெய் நலன்களுக்கு விரோதமாகவும், பின்னர் டாலரில் இருந்து யூரோவுக்கும் மாறிய ஈராக்கின் நிலை எல்லோருக்கும் கண்கூடாகத் தெரிந்ததுதான். இப்போது ஈரான். யூரோ நாணயம் உருவாவதற்கு முன்பே, அது கருத்தளவில் விவாதிக்கப்பட்டு வந்தபோதே அம்முயற்சியை வரவேற்றது ஈரான். அதுவரை கடைக்கண் அளவில் இருந்து வந்த அமெரிக்காவின் "ஜனநாயகப் பார்வை" ஈரான் மீது தீவிரமாகப் படிந்தது அப்போதுதான். இதற்குப் பதிலடியாகத்தான் அகமதிநிஜாத் தலைமையிலான ஈரான், டாலர்களில் இருந்து யூரோவை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
அமெரிக்காவின் சொற்களில் கூறுவதென்றால், "தீமையின் அச்சு" (Axis of Devil) நாடுகளில் ஒன்று ஈரான். இந்தப் பட்டியலில் உள்ள மேலும் 2 நாடுகள் வடகொரியா மற்றும் வெனிசுலா. இரண்டும் அமெரிக்காவின் டாலருக்கு எதிராக, யூரோவை தூக்கிப் பிடிக்கின்றன. அதிலும் வடகொரியா சர்வதேச பரிவர்த்தனைகள் முழுவதையும் யூரோவில்தான் மேற்கொள்கிறது. இனி டாலருக்கு எதிராக அமைய வேண்டும் புதிய உலகம்.
பின்குறிப்பு: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பின்பாட்டு பாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம்; ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. மேலும், யூரோ நாணயத்தை வலுப்படுத்தும் விசயத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமையோ, வலிமையான சிந்தனையோ இல்லை. எனவே, மேலை நாடுகளின் முகாமுக்குள் ஏற்படும் டாலர்-யூரோ என்ற முரண்பாட்டை வெற்றிகரமாகக் கையாள்வது என்பது ஐயத்திற்கிடமான உத்தியே.
(தினமனணி அரசியல் அரங்கம் பகுதியில் வெளியான கட்டுரை. புதிய, கூடுதல் விவரங்களுடன் திருத்தப்பட்டு இங்கே பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக