வியாழன், 16 டிசம்பர், 2010

பாமரம்

என்றோ
விழிப்பகுதிகளையும் கூட
விட்டுவைக்காது
விருப்பம்போல் விளையாடி
வேணல் தணிந்து இறங்கிய
`அம்மை'
குரல் நாணையும்
அறுத்துக்கொண்டு போய்விட்டாள்
கூடவே.
`யாரு கடன் ஆனாலும்
மாரி கடன் ஆகாதென'
இன்னும்
விழுந்து விழுந்து
கும்பிடுகிறாள்
வேப்ப மரத்தை அந்த
செவிட்டூமைக் கிழவி.

மரத்தடி போகையில்
இறக்கை கொண்டு
தலையிலடிக்கும்
குஞ்சு பொரித்த
`கரும் பித்ருக்களின்'
பதற்றம் புரியாமல்
ஏழரை நாட்டானுக்குப் பயந்து
முட்டிக் கொண்டிருக்கின்றனர்
சனீஸ்வரன் சந்நிதியில்.

காய்த்துக் கொழித்தாலும்
மலடாகவே மரந்திருந்தாலும்
ஏகதேசமாகவேனும்
எல்லா ஊரிலும் தட்டுப்படுகின்றன-
செருப்பும் விளக்குமாறும் பூட்டிய
கல்யாண முருங்கைகள்.
கல்லடியும் விழுவதில்லை
கண்ணடியும் விழுவதில்லை
`வேண்டுதல்கள்'
காய்த்துத் தொங்கும்
கோயில் மரங்களுக்கு.

பேயறைந்தது போலவே இருக்கின்றன,
பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது பயம்.
விட்டு விடுதலையாகி விடுமென
அசைத்துக்கூடப் பார்ப்பதில்லை
யாரும் ஆணியை.
`புடிச்சாலும் புளியங் கொம்பாப் பிடிக்கணும்'.

பௌருசம் கைவிட்ட பெண்கள்
அசையாப் பிள்ளையார் சாட்சியாய்
சுற்றி வருவது அரச மரத்தை.
ஈன்ற கன்றுடன்
வெளிப்போந்த ÔமாசுÕகளை
தோரணம் கட்டித் தொங்கவிடுவது
ஆலமரத்தில்.
பேறு பெற்றால் ஆலமரம்
பேறு கெட்டால் அரசமரம்.

பேறு எய்தவில்லை எனில்
பெண்ணென்றாலும் மலடி.
மரமாகவே இருந்தாலும்
மலடென்றால் ஆண் பனை.

எல்லோர் மனதிலும் இருக்கிறது
ஓரோர் கழுமரம்.
வீட்டுக்கு ஒன்றாய்
வளருது பாமரம்.

(கூட்டாஞ்சோறு காலாண்டிதழில் வெளியான கவிதை, அக்-டிச 2004)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக