கனிந்திருந்த மனது காயாகுமா?
உடைந்து போன காதலை
அணைத்துக் கொண்டு அரற்றலாம்
உடைந்து போன நிலாத் துண்டுகளை
ஒளித்துக் கொண்டு
சலனக் குளம் விம்முவதைப் போல.
நீர்மை தேங்கிய நதிக்கரைகளில்
மணிகள் தாங்கிய நெல் வயல்களில்
தன் காதலை அணைத்துக் கொண்டிருக்கலாம்
வறண்டு போன மலைக் குகைகளில்
பெயர்ந்து விழும் பாழடைந்த கட்டடங்களில்
சன்னமான விளக்கொளியைப் போல அழு.
நீர்த் துளிகள் விழுந்து தெறிக்கும் நிலம்
அவ்வளவு மகத்துவமானது அல்ல
அவள் நெற்றிப் பரப்பைப் போல.
காய்த்து தொங்குது வானமென்று
கல்லெடுத்து எறிந்தால் வீழுமோ
நட்சத்திரம் ஒன்று
கண்ணெடுத்து எறிந்தேன்
கண்ணெடுத்து மீண்டும் எறிந்தேன்
உன் முற்றமெங்கும் சிதறிக் கிடக்கின்றன
என் கண்கள்.
(வண்ணக்கதிர் இதழில் வெளியானது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக